×

கேரளாவில் 12ம் தேதி ஓணப் பண்டிகை தொடக்கம்: தோவாளையில் பூக்களுக்கான ஆர்டர் குவிகிறது..!

ஆரல்வாய்மொழி: குமரி மாவட்டம் தோவாளையில் புகழ்பெற்ற மலர்ச்சந்தை உள்ளது. உள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து தோவாளை மலர் சந்தைக்கு பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதேபோல் வியாபாரிகளும் அதிக அளவில் படையெடுப்பது வழக்கம். குறிப்பாக இங்கிருந்து கேரளாவுக்கு டன் கணக்கில் பல்வேறு வாசனை மலர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. கோயில் திருவிழாக்கள், பண்டிகை, சுபமுகூர்த்த நாள்களில் தோவாளை மலர்ச்சந்தையில் வியாபாரம் களைகட்டுவதை காண முடியும். இந்த நேரங்களில் பூக்களின் விலை அதிகமாக இருந்தாலும், வியாபாரிகள் போட்டிபோட்டு ஏலம் மூலம் பூக்களை வாங்கி செல்கின்றனர். இது தவிர வாசனை திரவியங்கள் தயாரிப்புகளுக்காகவும் பூக்கள் தேவாளை மலர் சந்தையில் இருந்து அதிக அளவில் கொண்டு செல்லப்படுகின்றன. இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக, திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் அனைத்தும், கடும் கட்டுப்பாடுகளுடன் மிகவும் எளிமையான முறையில் நடத்தப்படுகின்றன.

இதன் காரணமாக பூக்கள் விற்பனை அடியோடு சரிந்து உள்ளது. பூக்கள் அழுகும் தன்மை கொண்டவை என்பதால், அவற்றை பறிக்காமல் அப்படியே செடிகளில் விடவும் முடியாது. அவ்வாறு பறித்து விற்பனைக்கு அனுப்பும் பூக்களை சந்தையில் வாங்க ஆளில்லை. தற்போது பூக்களின் தேவைகள் குறைவாக இருப்பதால் விற்பனை கடும் மந்தமாக உள்ளது. இதனால் பூக்கள் விலை மிகவும் சரிந்து காணப்பட்டது. இந்த நிலையில் ஆடி அமாவாசையை தொடர்ந்து இன்று ஆடி பூரம் என்பதால் பூக்களின் விலை சற்று அதிகரித்து உள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பண்டிகைக்காக தோவாளையில் இருந்து வருடந்தோறும் ஆயிர கணக்கான டன் பூக்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கம். இதற்கிடையே கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. இந்த பண்டிகையில் பூக்கள் முக்கிய இடத்தை பெறுகிறது. ஓணத்தையொட்டி வீடுகள், கோயில்களில் வண்ண வண்ண மலர்களை ெகாண்டு அத்தப் பூ கோலங்களை அமைப்பது உண்டு.

இதற்கு தேவையான பூக்களின் பெரும்பகுதி தோவாளை மலர்ச்சந்தையில் இருந்து தான் கொண்டு செல்லப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ேகரளாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தமிழகம் உள்பட பிற மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு பூக்கள் கொண்டு செல்லவும் அரசு பல்வேறு விதிமுறைகளை கொண்டு வந்தது. இதனால் ஓணப்பண்டிகையின் போது கேரளாவில் இருந்து தோவாளை மலர்ச்சந்தைக்கு வியாபாரிகள் வரவில்லை. இது தவிர கடும் கட்டுப்பாடு காரணமாக ேதாவாளையில் இருந்து குறைந்த அளவிலான பூக்களே கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஆண்டும் ேகரளாவில் கொரோனா பாதிப்பு குறையவில்லை. இருப்பினும் பிற மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு பூக்கள் கொண்டு செல்ல இதுவரை கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை. பூக்களின் தேவை அதிகம் இருக்கும் என்று கேரள வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

வழக்கமாக கேரளாவில் இருந்து தோவாளைக்கு வியாபாரிகள் அதிக அளவில் வந்து பூக்களை ஏற்றி செல்வது வழக்கம். தற்போது கேரளாவில் கொரோனா பாதிப்பு தினசரி 20 ஆயிரத்துக்கும் குறையாமல் இருந்து வருகிறது. இதனால் குமரியில் இருந்து கேரளாவுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஆகவே களியக்காவிளை எல்லையை தாண்டு வருவது பெரும் சிரமமாக உள்ளது. இது தோவாளையை சேர்ந்த பூ வியாபாரிகளுக்கும் பெரும் கவலையை தந்தது. இந்த வருடமாவது கேரளாவுக்கு பூக்கள் கொண்டு செல்ல அனுமதி கிடைக்குமா என்று ஏங்கினர். இந்த நிலையில் ஓணம் பண்டிகைக்காக பூக்கள் தேவை என்று கேரளாவை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளதோடு, பல டன் பூக்களை ஆர்டர் கொடுத்து உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி நாளுக்கு நாள் பூக்களை கேட்டு ஆர்டர் கொடுக்கின்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளதாம். இது தோவாளை பூ வியாபாரிகளை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Tags : Kerala ,Doo , Onam festival begins on the 12th in Kerala: Order for flowers is piling up in Dovalai ..!
× RELATED கோடை மழை கொட்டியும் நீர்வரத்து குறைவு;...